search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவர்"

    வீட்டுக்குள் புகுந்து டிவி நடிகையை திருமணம் செய்வதாக கூறி மிரட்டல் விடுத்த என்ஜினீயரிங் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rithika
    போரூர்:

    பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

    இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.

    இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.

    இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Rithika
    நீலகிரியில் மாரடைப்பால் இறந்த என்ஜினீயரிங் மாணவர் வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அதிகாரிகள் செலுத்திய சம்பவம் கோர்ட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மகன் பாலமுரளி. இவர் ஊட்டியில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடன் பெற்று என்ஜினீயரிங் படித்தார். கணவர் இறந்த பின்னர் தாய் மட்டுமே மகனை படிக்க வைத்தார்.

    பாலமுரளி ரூ.30 ஆயிரம் மட்டுமே வங்கியில் செலுத்தியிருந்தார். இந்நிலையில் மீதி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பாலமுரளிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் பாக்கி வங்கிக் கடனை திருப்பிச்செலுத்தாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

    இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வக்கீல் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார்.

    இருப்பினும், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததார். இதனையடுத்து நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வக்கீல் ஸ்ரீஹரி, வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்.

    இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    நாகை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். இதுதெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பொள்ளாச்சி அருகே என்ஜினீயரிங் மாணவர் அணையில் குளித்தபோது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரி சங்கர் (வயது 20). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஆழியாற்றில் உள்ள ஆரியாபுரம் அணையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரிசங்கரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர் மீது தாய் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரத்தைச் சேர்ந்த பெண், கன்னியாகுரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.

    இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் தாயின் பராமரிப்பிலும், மகன் தந்தை பராமரிப்பிலும் இருந்து வருகிறார்கள். மகள் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மாணவி மாயமான அதே நாளில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். இதனால் அவர் தான் மாணவியை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 21-ந் தேதிபள்ளிக்கு சென்ற எனது மகள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பள்ளிக் கூடத்துக்கு சென்றேன். ஆனால் அவள் பள்ளிக்கு வரவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது மகள் மாயமான சமயத்தில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் என்ஜினீயரிங் மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். அந்த மாணவர் எனது மகளுடன் பழகி வந்துள்ளார். அவர் தான் எனது மகளை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். எனவே அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் என்ஜினீயரிங் மாணவரை தேடி வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் மாணவருக்கு 16 வயது ஆகிறது. மாயமான 2 பேரும் மைனர் என்பதால் அவர்கள் 2 பேரையும் மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மயிலம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் மகன் விக்னேஸ்வரன் (வயது 19). மயிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் நேற்று காலை மயிலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்ற தனது பாட்டியை அழைத்து வருவதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் காளி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு லாரியின் அச்சு திடீரென முறிந்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியவாறு எதிரே விக்னேஸ்வரன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் லாரியின் அடிப்பகுதியில் ஸ்கூட்டருடன் சிக்கிய விக்னேஸ்வரன் சுமார் 30 அடி தூரம் வரை இழுத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து சாலையோர மரத்தில் மோதி லாரி நின்றது. இந்த விபத்தில் விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அச்சு முறிந்ததை அறிந்த டிரைவர் ஓடும் லாரியில் இருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி, மயிலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×